• vilasalnews@gmail.com

இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்குதடையின்றி உயர் கல்வி பயிலும் வகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இளங்கலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் 'NCHM JEE-2026' நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் இத்துறையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, சென்னை தரமணியில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த 'ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில்' (IHM) மூன்று ஆண்டு கால பி.எஸ்.சி (B.Sc Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். உலக அளவில் 13-வது இடத்தையும், மனிதவள மேம்பாட்டு மைய ஆய்வின்படி 2-வது இடத்தையும் பிடித்துள்ள இந்த கல்வி நிறுவனம், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு கல்வி அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படிப்பில் சேர விரும்புவோர் 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25, 2026 கடைசி நாளாகும். இணையதளம் வழியாக நடைபெறும் இத்தேர்வு ஏப்ரல் 25, 2026 அன்று நடத்தப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மற்றும் தேசிய தேர்வு முகமையின் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


இப்படிப்பிற்கான முழுச் செலவையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர விடுதிகள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற சேவைத் துறைகளில் கைநிறைய ஊதியத்துடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ஆரம்ப கால ஊதியமாக 25,000 முதல் 35,000 ரூபாய் வரையும், அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் 70,000 ரூபாய் வரை மாத ஊதியம் பெறவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

  • Share on

ஒரே நாளில் வழக்குக்கு தீர்வு... மார்ச் 14-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்; பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது - செல்வப்பெருந்தகை காட்டம்!

  • Share on