• vilasalnews@gmail.com

ஒரே நாளில் வழக்குக்கு தீர்வு... மார்ச் 14-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா நீதிமன்ற வளாகங்களில், வரும் மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. 


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஆர். வசந்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:


தேசிய மற்றும் மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்காளிகளின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தலா 2 அமர்வுகளும் செயல்படும். மேலும் விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகா தலைமையகங்களில் தலா ஒரு அமர்வு வீதம் வழக்குகள் விசாரிக்கப்படும்.


இந்த மக்கள் நீதிமன்றத்தில், பரஸ்பரம் பேசித் தீர்க்கக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து விதமான சிவில் (உரிமையியல்) வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரும் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி கடன் தொடர்பான சிக்கல்கள், குடும்ப நல (திருமணம் சார்ந்த) பிரச்சனைகள் குறித்து சமரச முறையில் தீர்வு காணப்பட உள்ளன. 


நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் முடித்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, வழக்காளிகள், எதிர் வழக்காளிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்குத் தீர்வு கண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • Share on

மணப்பாடு கடலில் ஆச்சரியம்: மீனவர் வலையில் சிக்கிய அதிசயம்!

இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

  • Share on