தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகள் மூலம் தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று அதிகாலை மணப்பாட்டைச் சேர்ந்த ஜெயக்கர் என்பவர் தனது குழுவினருடன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றார்.
கரையிலிருந்து சுமார் 23 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கினர். அப்போது ஜெயக்கர் வீசிய வலையில் ஏதோ ஒரு பெரிய உருவம் சிக்கியதை மீனவர்கள் உணர்ந்தனர். தண்ணீருக்குள் அந்த மீன் கடுமையாகப் போராடிய நிலையில், நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு மீனவர்கள் அதை லாவகமாகப் படகிற்குள் இழுத்தனர். அப்போதுதான் அது ஒரு ராட்சத சுறா மீன் என்பது அவர்களுக்குத் தெரிந்தது.
மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மீனவர்கள், அந்த சுறாவை எடை போட்டபோது அது 73 கிலோ இருந்தது. இவ்வளவு பெரிய சுறா மீன் பிடிபட்ட தகவலைக் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் அதை ஆச்சரியத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் நடைபெற்ற ஏலத்தில், வியாபாரி ஒருவர் இந்தச் சுறா மீனை 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த ராட்சத சுறா மீன், உடனடியாக ஒரு வேன் மூலம் விற்பனைக்காக மற்ற இடங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டது.



