முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அதிகாலையில் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து யாகசாலை வழிபாடுகளும் நடைபெற்று வந்தன.
தினசரி காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜைகள் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி மற்றும் தெய்வானை அம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினார். வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் இசைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க சண்முக விலாச மண்டபத்திற்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) மாலை 4 மணியளவில் திருச்செந்தூர் கடற்கரையில் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு யாகசாலையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு யாகசாலை தீபாராதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்ற பின்னர், பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளினார். அங்கு அசுரர்களின் தலைவனான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார வைபவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்வின்போது கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
சூரபத்மனை வதம் செய்த பின்னர் அவன் மயிலாகவும், சேவலாகவும் மாறியதைத் தொடர்ந்து, மயிலைத் தனது வாகனமாகவும், சேவலைத் தனது கொடியாகவும் முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டதாக ஐதீகத்தின்படி நிகழ்வு நடைபெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்வைக் காண திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். கடற்கரை முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கந்த சஷ்டி விழாவையொட்டி ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.
மேலும் இலங்கை, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் பங்கேற்றனர்.