குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று தூத்துக்குடியில் உள்ள தாம் பயின்ற கல்வி நிறுவனமான வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வ.உ.சி. கல்லூரியின் செயலாளர் A.P.C.V. சொக்கலிங்கம், முதல்வர் டாக்டர் சி. வீரபாகு, முன்னாள் மாணவர் தலைவர் ஏ.வி. முருகேசன், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழாவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவைத் திறந்து வைத்தார். பின்னர், தாம் பயின்ற பழைய வகுப்பறைக்குச் சென்று, தனது கல்லூரிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 1975–78 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடி, பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் உரை:
வ.உ.சி. கல்லூரியின் முன்னாள் மாணவராக இன்றைக்கு பாரத தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராக, நம்முடைய கல்லூரியின் பவள விழாவையும், முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழாவையும் ஒருங்கே கொண்டாடுகின்ற ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
என்னைச் செதுக்கிய ஆசிரியப் பெருமக்கள்
இந்தக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களைச் செதுக்கி உருவாக்கிய பெருமை எங்களது ஆசிரியப் பெருமக்களையே சாரும்.
கம்யூனிசத்திற்கும் சோஷலிசத்திற்கும் கேபிடலிசத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்களுடைய பேராசிரியர் எடுத்துரைத்த விதம் இன்றைக்கும் என் உள்ளத்தைவிட்டு அகலாது.
எங்களுடைய பேராசிரியர் சொன்னார்:
Socialism encourages social responsibility, but socialism discourages entrepreneurial ability.
இதற்கும் மேலாக ரத்தினச் சுருக்கமாக சோஷலிசத்தின் பலத்தையும் பலவீனத்தையும் விளக்கிய பேராசிரியர் இந்த உலகத்திலேயே இருப்பாரா என்பது ஆச்சரியம்தான்!
அதே நேரத்தில் கேபிடலிசத்தைப் பற்றிச் சொல்லும்போது,
Capitalism encourages entrepreneurial ability, but it exploits the resources endlessly. என்று சொன்னார்கள்.
அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. தேவைக்கேற்ற உற்பத்தி என்பதைவிட, இயற்கை வளங்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்ட வேண்டும் என்கின்ற உணர்வுதான் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது. அதுதான் கேபிடலிசத்தின் மிகப்பெரிய எதிர்மறையான அம்சம் என்று அவர்கள் அன்றைக்குக் குறிப்பிட்டது இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது.
நான் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கல்லூரியில் கற்றுக்கொண்டதுதான் என்னை இன்றைக்கு இந்திய தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராக வழிநடத்துகிறது.
1975 முதல் 1978 வரை – மறக்க முடியாத கல்லூரி வாழ்க்கை
இந்த விழாக் காலகட்டத்தில் நானும் 1975 முதல் 1978 வரை இங்கே இருக்கின்ற பல மாணவர்களைப் போலவே கல்லூரி வகுப்பறைகளில் அமர்ந்திருந்தேன். அந்த நினைவுகள் எல்லாம் இன்றைக்கும் பசுமையாக என் மனதில் இருக்கின்றன.
கல்லூரியில் படித்த காலத்தில் என்னோடு இன்றைக்கு இங்கே வந்திருக்கின்ற என்னுடைய வகுப்புத் தோழர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.

என்னுடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் இங்கே வந்திருப்பதும், அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதும் உண்மையிலேயே நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
கல்லூரி வளாகத்தின் பசுமையான நினைவுகள்
இந்தக் கல்லூரியின் வளாகம் முழுவதும் எனக்கு அப்படியே நினைவிருக்கிறது.
இந்த கல்லூரியின் கேன்டீனில் ஒரு டீ குடித்தபோது இருந்த மகிழ்ச்சி, உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைக்காது என்பதுதான் எதார்த்தமான உண்மை!
இன்று அதைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்தக் கல்லூரி எனக்கு அளித்தது கல்வி மட்டுமல்ல; இங்கே கிடைத்த அனுபவங்களும் என்னுடைய ஆளுமையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன என்பதை உணர்கிறேன்.
அவசரநிலைக் காலமும் எங்களுடைய கருத்து வேறுபாடுகளும்
கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி. வீரபாகு அவர்களுக்கும் எங்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் நாங்கள் படித்த காலத்தில் உண்டு.
அதற்குக் காரணம், அவருடைய ஆளுமையின் மீது எங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் அவசரநிலைப் பிரகடனம் வந்தது.
அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். நாங்கள் அவசரநிலைப் பிரகடனத்திற்கு எதிரானவர்கள். அதுதான் எங்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு.
அவருடைய ஆளுமையின் மீதோ, அவர் இந்தக் கல்லூரியின் மீது காட்டிய அக்கறையின் மீதோ, இந்தக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் மகத்தான வெற்றிபெற வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தின் மீதோ எங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது.
இந்தக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் ஏ.பி.சி. வீரபாகு அவர்களைப் போல ஒரு தாளாளரை இந்த உலகம் இன்றைக்கும், என்றைக்கும் கண்டிருக்க முடியாது என்று சொல்வதில் எனக்குப் பெருமை.
அந்த ஆளுமைகள்தான் எங்களுக்குள்ளாகவும் ஓர் ஆளுமையை உருவாக்கின என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்.
அதேபோல, இந்தக் கல்லூரியின் புதிய விடுதி கட்டடத்தில் நாங்கள் இருந்தபோது, தினந்தோறும் VVD நித்யானந்தம் அவர்கள் இந்த வழியாக நடந்து வருவார்கள். காலையில் தினந்தோறும் நடந்து வருவார்.
நாங்களும் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்க்கிறபோதெல்லாம், இவரைப் போல ஒரு பெரிய உற்பத்தியாளராக, ஒரு பொருளை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்துகின்ற தொழிலதிபராக நாம் வரவேண்டும் என்ற உணர்வை அவர் எங்களுக்குள் தூண்டினார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
இப்படி இந்தக் கல்லூரியில் நாங்கள் கழித்த மூன்று ஆண்டுகள் மறக்க இயலாதவை.

எனக்கு மட்டுமல்ல, யார் இந்தக் கல்லூரியில் படித்திருந்தாலும் அவர்களால் மறக்க இயலாத மகிழ்ச்சிகரமான ஆண்டுகள் அவர்களுடைய வாழ்க்கையில் உண்டு என்று சொன்னால், அது மாணவப் பருவமாகத்தான் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படி இங்கே பார்த்த ஆளுமைகளும், கற்ற கல்வியும்தான், புதின் வந்தாலும் அவரைச் சந்திக்கின்ற மனவலிமையையும், அவரோடு உரையாடுகின்ற மனவலிமையையும் எனக்கு அளித்திருக்கின்றன.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் குழு வந்தாலும் அதைச் சந்திக்கின்ற வலிமையையும் அளித்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தை நடத்துவது ஒரு கல்லூரியை நடத்துவதைவிடவும், ஒரு வகுப்பை நடத்துவதைவிடவும் மிகக் கடினம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த நாடாளுமன்றத்தின் மேலவையை நடத்துவதிலும் இன்று எனக்கு இந்த அனுபவங்கள் பேருதவியாக இருக்கின்றன.
நான் இங்கே எதையெல்லாம் கற்றேனோ, எதையெல்லாம் பார்த்து, அவற்றை என்னுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ, அந்த ஆளுமைகள்தான் இன்றைக்கு என்னைக் குடியரசுத் துணைத் தலைவராக உயர்த்தியிருக்கின்றன.
ஒரு மனிதனுடைய குணங்களில் மிகச் சிறந்த குணமாக நான் கருதுவது என்னவென்றால், எந்த உயரத்திற்குச் சென்றாலும் தன்னுடைய பழைய நினைவுகளை யார் மறக்காமல் இருக்கிறார்களோ, அவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள்.
அதனால்தான் வள்ளுவர் சொன்னார்:
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
என்று.
அப்படி இந்தக் கல்லூரிக்கு வரவேண்டும் என்று சொன்னவுடனேயே நான் சொன்னேன்: அது நம்முடைய கல்லூரி; என்னுடைய கல்லூரி. நான் அங்கே வருகிறேன் என்று.
எந்த மனிதனும் தன்னுடைய வேர்களை மறக்காமல் இருக்கிறானோ, அப்போதுதான் அவன் மிகச்சிறந்த உயரத்தை அடைய முடியும்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டமும் மாணவர் கால நினைவுகளும்
அப்படி அந்த அவசரநிலைப் பிரகடனம் இருந்தபோது, நம்முடைய கல்லூரியின் கூட்டத்தில்
நான் பேசுகிறபோது எப்படியாவது அவசரநிலையை எதிர்த்துப் பேச வேண்டும் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. அதனால் அவசரநிலையை எதிர்த்து அங்கே பேசிவிட்டேன்.
திடீரென்று மூன்று போலீஸ் வேன்கள். எப்படி வந்தார்கள் என்று தெரியாது. ஆனால், மூன்று வேன்களும் மிக வேகமாகச் சீறிக்கொண்டு உள்ளே வருகின்றன.
நாங்கள் நடந்து வெளியே வந்துவிட்டோம்.எப்படி நாங்கள் தப்பித்தோம் என்பதை அடுத்த நாள் காலையில்தான் தெரிந்துகொண்டோம்.
கல்லூரியின் முதல்வர் சுப்பையா பிள்ளை அவர்களுடைய மகன்தானே அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்தார்.
அதனால் அவரிடம் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவர், ‘அப்படி எதுவுமே நடைபெறவில்லை. ஏதோ தவறான தகவலின் அடிப்படையில் நீங்கள் வந்துவிட்டீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் கல்லூரி முதல்வரின் மகனாக இருந்த காரணத்தினால்தான் மேற்கொண்டு விசாரணை எதுவும் இல்லாமல் அந்தச் சம்பவம் முடிவுற்றது. இல்லையென்றால் நானும் மிசாவில் சிறை சென்றிருப்பேன்.
அதுமட்டுமல்ல, நான் மாணவனாக இருந்தபோது நிறைய பேரை அவசரநிலைக் காலத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். அவர்களுடைய குடும்பங்கள் எல்லாம் மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது.
அந்தக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு மாணவனாக நிதி திரட்டியதும், அவர்களுக்கு உதவியதும் என்னுடைய மனதில் இன்றைக்கும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
நம்முடைய தாளாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கருத்தைச் சொன்னார். காலம் எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆனாலும் வ.உ. சிதம்பரம் கல்லூரியில் இன்றைக்கும் ஒரு உயர்ந்த கலாச்சாரம் மாறாமல் இருக்கிறதே! அன்றைக்கும் அது வணிகமயமாக்கப்படவில்லை; இன்றைக்கும் அது வணிகமயமாக்கப்படவில்லை. அதுதான் நம்முடைய கல்லூரியின் மகத்தான, மகத்தான சாதனை.
அதை நான் ஏன் இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன் என்றால், இந்தக் கல்லூரி யாருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது? வ.உ. சிதம்பரம் அவர்களுடைய பெயரைத் தாங்கி நிற்கிறது.
வ.உ. சிதம்பரத்தைப் போல இன்னொருவர் இந்த தேசத்திற்காக உழைத்து, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழக்க முடியுமா என்று கேட்டால், அப்படிப்பட்ட இன்னொருவரை இறைவன்தான் படைக்க வேண்டும்!

கல்வியின் முக்கியத்துவத்தைப் பலரும் உணராத காலத்தில், பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவது தேவையற்றது என்று நினைத்துப் பல பெற்றோர்கள் இருந்த காலத்தில், வ.உ. சிதம்பரம் பிள்ளை மட்டுமல்ல, அவருடைய தந்தை உலகநாத பிள்ளையும் சட்டக் கல்வி கற்றவர்கள்.
அப்படியென்றால், அவர்கள் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்திருப்பார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
அவ்வளவு செல்வச் செழிப்பையும் இழந்து, ஒரு தலைவராகக் கைது செய்யப்பட்டார். அப்போது பதினைந்து நாட்கள் ஒட்டுமொத்த நெல்லை மாவட்டமும் ஸ்தம்பித்துப் போயிற்று. ஆயிரக்கணக்கான மக்கள் அவரைச் சிறைக்கு வழியனுப்புவதற்காகக் கூடியிருந்தார்கள்.
ஆனால், அவர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்தபோது, கோவைச் சிறை வாசலில் அவரை வரவேற்க இரண்டு பேர்தான் இருந்தார்களாம்.
ஒருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சிவா அவர்கள். இன்னொருவர் அவருக்கு மிகமிக நெருங்கிய உறவினர்.
நான் ஏன் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதற்குப் பிறகு அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாதவை.
கோவைச் சிறைக்குச் சென்றால் இன்றைக்கும் அந்தச் செக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மாடுகூட இழுக்க முடியுமா என்று சந்தேகப்படுகின்ற அளவுக்கு மிகப்பெரிய கல் செக்கு அது. அதை ஒரு மனிதராக அவர் இழுத்திருக்கிறார்.
அதிலும் அவர் படித்தவர்; செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்.
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அந்தத் தொழிலாளர்களுக்காகத் தன்னுடைய மனைவியின் நகைகளையும், தன்னுடைய நிலம், உடைமைகளையும் விற்று அவர்களுக்குச் சாப்பாடு போட்ட ஒரு மகத்தான தலைவர் அவர்.
சிறைக்குள்ளே எண்ணெய் பிழிவதற்கான செக்கை இழுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் ஒரு மண்ணெண்ணெய்க் கடை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இவ்வளவு மரியாதையோடு வாழ்ந்த ஒரு மனிதர், எல்லாவற்றையும் இழந்து நிற்பது தனது தன்மானத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்தால் சென்னையை நோக்கி இடம்பெயர்கிறார்.
சென்னைக்குச் சென்றபோது, ஆங்கிலேயர்கள் அவருடைய வழக்கறிஞர் உரிமத்தையும் ரத்து செய்துவிட்டார்கள். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியவில்லை.

அப்படிப்பட்டவருடைய பெயரில் ஒரு அற்புதமான கல்லூரி தொடங்கப்பட்டு, இன்றைக்கு அது பவள விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
இப்படி எத்தனையோ தியாகங்கள், சொல்லொண்ணாத வேதனைகள், தாங்கிக்கொள்ள முடியாத துயரங்கள் ஆகியவற்றைக் கடந்துதான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட மகத்தான தியாகங்களைச் செய்தவர்களால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது.
அந்தத் தேசிய உணர்வுதான் இன்றைக்கு நமக்கு ஒரு மகத்தான தேசத்தைத் தந்திருக்கிறது.
தமிழகத்தின் தேசிய உணர்வு
ஏதோ காலத்தின் போக்கில் பலர் நினைப்பதைப்போல, தமிழகத்தில் தேசிய உணர்வு அழிந்துவிட்டதா என்று கேட்டால், என்னுடைய பதில் நிச்சயமாக இல்லை என்பதுதான்.
மகத்தான தியாகிகளான சுப்பிரமணிய சிவா,வ.உ. சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
இவர்களெல்லாம் வளர்த்த தேசிய உணர்வு இந்த மண்ணை விட்டு ஒருபோதும் மாறாது; மறையாது என்பதுதான் என்னுடைய ஆழமான நம்பிக்கை.
இன்று இரண்டு நாட்களுக்கு முன்பாக நீங்கள் படித்திருப்பீர்கள். இந்த ஆண்டு தீபாவளிப் பட்டாசு விற்பனை ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டுக்கான இலக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்.
இவ்வளவு பெரிய சந்தை நமக்கு எப்படிக் கிடைத்தது?
இந்த பாரத தேசம் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதால்தான் இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை பெரிய பொருளாதார வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
இந்த தேசம் ஒருமைப்பட்ட தேசமாக, மகத்தான தேசமாக இருக்கின்றபோதுதான் நம்முடைய தமிழின் பெருமையும் பாதுகாக்கப்படும்.
இந்த தேசம் ஒரே தேசபக்தி உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறது. அதிலிருந்து தமிழகம் விதிவிலக்காக மாறிவிடக்கூடாது.
சின்னச் சின்ன நாடுகள், எத்தனையோ நாடுகள் நம்மைச் சந்திக்க வருகின்றன. அவர்கள் வரும்போது சொல்வார்கள்:
“உங்களுடைய மும்பை நகரத்தின் மக்கள் தொகை, எங்களுடைய நாட்டின் மக்கள் தொகையைவிடப் பத்து மடங்கு அதிகம்” என்று சொல்வார்கள். ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையோடு நம்மை அணுகுவார்கள்.
நான் அவர்களிடம் ஒன்றைச் சொல்வேன். “சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே மாதிரியான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் மோடி அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். All the sovereign states in the world, whether small or big, are equal” என்று அவர்களிடம் சொல்வேன்.
இதையெல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், இங்கே இருக்கின்ற மாணவப் பெருமக்கள் தேசிய உணர்வைத் தமிழ் மண்ணில் மீண்டும் வலுப்படுத்த வேண்டும். தேசிய உணர்வுதான் நமது தமிழைப் பாதுகாக்க முடியும். தேசிய உணர்வுதான் தமிழ்நாட்டின் பெருமையைக் காத்து நிற்க முடியும். எந்தச் சூழ்நிலையிலும், யாரிடத்திலும் இழிவுக்கு ஆளாகாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டவும் தேசிய உணர்வுதான் துணை நிற்கும்.
இல்லையென்றால், வல்லரசுகள் சின்னஞ்சிறு நாடுகளின் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். வெனிசுலா என்ற ஒரு நாட்டின் அதிபர் ஒரே இரவில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு எதிராக எத்தனை நாடுகள் குரல் கொடுத்தன? இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா என்பது நமக்குப் பெரிய சந்தை மட்டுமல்ல; வலுவான, ஒருங்கிணைந்த தேசமாகவும் திகழ்கிறது. இந்த தேசம் வலுவாகவும் பெரியதாகவும் இருப்பதால்தான், இங்கே வாழ்கின்ற அத்தனை மக்களின் கலாச்சாரங்களும் பாதுகாக்கப்படுகின்றன* தமிழ் கலாச்சாரமாக இருந்தாலும், மலையாளக் கலாச்சாரமாக இருந்தாலும், கன்னடர்களின் கலாச்சாரமாக இருந்தாலும், தெலுங்கர்களின் கலாச்சாரமாக இருந்தாலும், மராட்டியர்களின் கலாச்சாரமாக இருந்தாலும், வங்காளிகளின் கலாச்சாரமாக இருந்தாலும், பஞ்சாபியர்களின் கலாச்சாரமாக இருந்தாலும், காஷ்மீரிகளின் கலாச்சாரமாக இருந்தாலும், அவை அனைத்தும் பாதுகாக்கப்படுவதற்குக் காரணம், இந்த தேசம் ஒன்றுபட்டு நிற்கின்ற ஒரு வலிமையான தேசமாக இருப்பதுதான்.
நமது பிரதமர் மோடி அவர்களைப் போன்ற ஒரு தேசியத் தலைவரை நான் இதுவரை கண்டதில்லை. நான் கண்ட தேசியத் தலைவர்களில் அவர் ஒரு மகத்தான தலைவர்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஐம்பது கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழான நிலையிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது உலக வரலாற்றிலும், மனித இனத்தின் வரலாற்றிலும் ஒரு மகத்தான சாதனை.
அதனால்தான் நான் எப்போதுமே சொல்வேன்: உலக அரசியல் அரங்கில் இரண்டு தலைவர்களை இந்த மனித இனம், இந்தப் பூமியில் வாழும் வரை மறக்க முடியாது. ஒருவர் ஆபிரகாம் லிங்கன். ஏனென்றால், அவர் தனது நாட்டிலேயே நிலவிய அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி, கருப்பின மக்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார். இன்று உலகமே போற்றுகின்ற, எல்லோரும் சமம் என்ற உயர்ந்த தத்துவத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடியவர் ஆபிரகாம் லிங்கன்.
எல்லோரும் சமம் என்று நாம் பேசினாலும், ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு உலகமாகத்தான் இன்னும் பல இடங்களில் நிலைமை இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக, மோடி அவர்கள் ஐம்பது கோடி மக்களை வறுமையிலிருந்தும் பட்டினியிலிருந்தும் விடுவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
முதலில் உற்பத்தி பெருக வேண்டும். அப்போதுதான் வறுமை ஒழியும். உற்பத்தி பெருகும்போதுதான் ஒரு நாட்டின் செல்வ வளம் உயரும். செல்வ வளம் உயர்ந்தால் மட்டுமே, அந்தச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.
இதற்கு மாறாக, ஏற்கெனவே இருக்கின்ற செல்வத்தை மட்டுமே பங்கிட்டுக் கொண்டிருந்தால், காலப்போக்கில் நாம் வறுமையை மட்டும்தான் பங்கிட்டுக்கொள்ள முடியும்.
நாமும் கண்மூடித்தனமாக ஏதோ ஒரு கொள்கைக்காகவே மனிதர்கள் பிறந்தவர்கள் என்பதைப் போலச் சிந்திக்கக் கூடாது. மனிதர்களின் நலனுக்காகத்தான் எல்லா அமைப்புகளும், கொள்கைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
அது மதமாக இருக்கட்டும், ஜாதியாக இருக்கட்டும், இன வேறுபாடாக இருக்கட்டும்; எதுவாக இருந்தாலும், அது மனிதர்களின் நலனைக் காப்பதற்காகத்தான் இருக்க வேண்டும்.
ஒரு மதம் உருவாக்கப்படும்போது, அந்த மதத்தின் வழியாக மனிதன் தனது ஒழுக்கத்தையும் நல்வழியையும் பெறுகிறான். அதற்காகத்தான் மதம். *இந்த மதம்தான் உயர்ந்தது, அந்த மதத்தைவிட இந்த மதம்தான் உயர்ந்தது என்று சொல்வது அறியாமையின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா மதங்களும் மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. எல்லா இறைவனும் ஒன்றுதான். ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கையின்படி வழிபடுவதற்கான உரிமை இருக்கிறது. எந்தத் தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை அவரவர் விருப்பத்திற்கும் உரிமைக்கும் விட்டுவிட வேண்டும். ஒரு மதம் மற்றொரு மதத்தைவிட உயர்ந்தது என்று கூறுவதற்கு எந்த மதத்தினருக்கும் உரிமை இல்லை என்பதே என்னுடைய கருத்து.
2014ஆம் ஆண்டில் மோடி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இந்த நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 770 ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டில், பத்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை சுமார் 1,200 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏறத்தாழ 70 சதவீத வளர்ச்சி. கல்லூரிகளின் எண்ணிக்கையும் இன்று 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நம்முடைய திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் இருப்பதைப் போல, நாடு முழுவதும் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எம்.கள், புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் என உயர்கல்வி மற்றும் மருத்துவக் கல்விக்கான நிறுவனங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்த நிலை மாறி, இன்று ஜார்க்கண்ட் சென்றாலும் எய்ம்ஸ் இருக்கிறது; சத்தீஸ்கர் சென்றாலும் எய்ம்ஸ் இருக்கிறது; தமிழ்நாட்டில் மதுரையிலும் எய்ம்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படி நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன.
வ.உ.சி. கல்லூரியும் தனது பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருவதை நான் இங்கே வரும்போது பார்த்தேன்.
இன்றைய உலகில் அறிவியல் சார்ந்த முன்னேற்றமும், அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியும் இல்லாமல், உலகமயமாக்கலின் போட்டியை நமது நாடு எதிர்கொண்டு வெற்றி பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை.

நிச்சயமாக, நமது கல்லூரியும் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் புதிய புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அவை ஏழை, எளிய மக்களுக்கும் சென்றுசேர வேண்டும். சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கின்ற மாணவர்களுக்குக்கூட தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
இதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் உள்ளப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரதி சொன்னான்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.”
உண்மைதான்! ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாயின் மீது இருக்கின்ற பற்று ஒருபோதும் குறையாது. வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள் வந்தாலும், தாய் மீது ஒருவர் கொண்டிருக்கும் பாசம் தனித்துவமானது. அதுபோலத்தான் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியின் மீது மிகுந்த மரியாதையும் பிடிப்பும், சொல்ல முடியாத ஈர்ப்பும் இருப்பது இயற்கை.
ஆனால், என்னுடைய தாய்மொழி மீது நான் வைத்திருக்கின்ற பாசத்திற்காக மற்றவர்களுடைய தாய்மொழிகளை இழிவுபடுத்திப் பேச வேண்டும் என்று நான் நினைக்கக் கூடாது. நமக்கு நம்முடைய தாய்மொழி எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய்மொழி முக்கியமானதுதானே!
பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமாகத் தமிழன் உலகை ஆள முடியும் என்ற உயர்ந்த சிந்தனையை இந்த மாணவர்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
எந்த ஒரு மொழிக்கும் எதிராக இருப்பதன் மூலம் நம்முடைய தாய்மொழியை வளர்த்துவிட முடியாது. நம்முடைய தாய்மொழியின் சிறப்பையும் செம்மையையும் உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், நமக்கும் பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.
பாரதி அந்தப் பெருமிதத்தோடு சொன்னதற்குக் காரணம் என்ன? அவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தன. பாரதிக்கு ஆங்கிலம் தெரியும்; சமஸ்கிருதம் தெரியும்; தெலுங்கு தெரியும். அதேநேரத்தில், தமிழை அவரைப் போல ஆழமாகக் கற்றுணர்ந்தவர்கள் மிகச் சிலரே.
அப்படி நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் இன்றைக்கு இங்கே இருக்கின்ற இளைய மாணவப் பெருமக்களிடம் நான் முன்வைக்க விரும்பும் ஒரே பணிவான வேண்டுகோள்.
அருமைச் சகோதரர்களே!
வாழ்க்கையைச் சீரழிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து நாம் கவனமாக விலகியிருக்க வேண்டும். குறிப்பாக, போதைப் பழக்கங்கள் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒருவன் தனது இளம் வயதிலேயே தீய செயல்களையும் தீய பழக்கவழக்கங்களையும் தன்னை அண்டவிடாமல் தடுத்து நிறுத்துகின்ற வல்லமையைப் பெற்றிருக்கிறானோ, அவனால் மட்டும்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட முடியும்; பெரிய சிகரங்களை எட்ட முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. சிலருக்குத்தான் குறிப்பிட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே செம்மைப்படுத்திக்கொள்வதன் மூலமாகத்தான் உயர முடியும்.
நம்மை நாம் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், தீய பழக்கவழக்கங்கள் நம்மை நெருங்கவிடாமல் விலகி நிற்கும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எத்தனையோ நண்பர்களோடு நாம் பழகலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தீய பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. முடிந்தால், நம்முடைய நண்பர்களும் அந்தத் தீய பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கு நம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். அவர்களிடத்திலும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுதான் ஒரு தனிமனிதனின் மகத்தான வெற்றியாக இருக்க முடியும்.
ஒரு முன்னாள் மாணவனாக இந்தக் கல்லூரியின் வளர்ச்சியைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஒரு கல்வி நிறுவனம் எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல. அதற்குப் பின்னால் பல தலைமுறைகளின் உழைப்பு இருக்கிறது; பலருடைய அர்ப்பணிப்பு உணர்வு இருக்கிறது; எண்ணற்ற மாணவர்களின் கனவுகளும் வெற்றிகளும் இருக்கின்றன.
இந்தப் பவள விழா கடந்த காலப் பெருமைகளை நினைவுகூரும் விழாவாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் புதிய சாதனைகளைப் படைப்பதற்கான ஒரு புதிய தொடக்கமாகவும் அமையட்டும்.
வ.உ.சி. அவர்களின் பெயரைத் தாங்கிய இந்தக் கல்லூரி, மேலும் பல தலைமுறைகளுக்கு அறிவொளி வழங்கட்டும்.
2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டும். சிறு சிறு துளிகள்தான் பெருவெள்ளமாக மாறுகின்றன. நம்மால் முடிந்த பங்களிப்பை மனப்பூர்வமாகச் செய்வோம்.
இந்தியா உலகின் வல்லரசாக உருவாவதை உலகின் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர்வோம். 2047ஆம் ஆண்டில் ஒரு உன்னதமான பாரத தேசத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் நம்முடைய முழுமையான, உள்ளப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்வோம்.
இன்றைக்கு என்னையும் அழைத்து, உங்களோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பளித்த வ.உ.சி. கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற நன்றியைச் சமர்ப்பித்து விடைபெறுகிறேன்.
“வாழ்க தமிழ்! வாழிய பாரத மணித்திருநாடு!”
என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி! வணக்கம்!