கடன் தவணைகளைச் செலுத்த முடியாத சூழலில், பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அளித்ததாகக் கூறப்படும் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளான கார் ஓட்டுநர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி போல்டன்புரம் முதல் தெருவைச் சேர்ந்த கதிரவன் (44), கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி, தனது தொழில் தேவைக்காக தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7.50 லட்சம் கடன் பெற்று கதிரவன் கார் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கடனுக்கான மாதத் தவணைகளைத் தொடர்ந்து செலுத்தி வந்த அவர், தொழிலில் ஏற்பட்ட சரிவு காரணமாக 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத் தவணைகளைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்று கடன் தொகையைச் செலுத்துமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கதிரவனின் வீட்டிற்குச் சென்றதாகவும், அங்கு அவரை மற்றவர்கள் முன்னிலையில் அவமதித்ததுடன், காரைப் பறிமுதல் செய்து எடுத்துச் செல்ல முயன்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கதிரவன், மறுநாள் அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 18-ஆம் தேதி காலை சுமார் 10.15 மணியளவில் கதிரவன் உயிரிழந்தார். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான அவர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கதிரவனின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் வசூலின்போது நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
