தூத்துக்குடியில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் பைக் மோதிய கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-01 பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் தங்கேஷ் பாரதி மற்றும் முத்தையாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த இளவரச பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (24). தங்கேஷ் பாரதி பொறியியல் பட்டதாரி, கார்த்திக் டிப்ளமோ பட்டதாரியும் ஆவர்;
இவர்கள் இருவரும் நேற்று இரவு கேடிஎம் பைக்கில் தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் முத்தையாபுரம் தோப்புத் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தங்கேஷ் பாரதி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
