• vilasalnews@gmail.com

பொதுமக்களுக்கு மனம் இல்லாத மனமகிழ் மன்றம்... தவெக அரசை கடுமையாக சாடும் கீதா ஜீவன்!

  • Share on

தவெக அரசு தூத்துக்குடி மாநகரில் மனமகிழ் மன்றங்கள் திறக்க அனுமதிக்க கூடாது என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 


தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் விஜய். அதன்படி தூத்துக்குடி மாநகரிலும் ஒரு சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கதக்கது. பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு இப்போது வழக்கம்போல அந்தர் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். 


தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைகளை வேகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக 5 முதல் 6 விற்பனை கவுண்டர்களை திறந்து காவல் துறை பாதுகாப்போடு மது விற்பனையை நடக்கிறது.  மது விற்பனை வேகப்படுத்தும் விதமாக ஆன்லைன் புக்கிங் வசதிகளையும் அமல்படுத்த ஆயத்தமாகிறது அரசு. 


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனாலும் காவல்துறையினரை மதுக்கடை பாதுகாவலர்கள் போல பயன்படுத்துவது வெட்கக்கேடு. இப்போது அடுத்த அத்தியாயமாக மனமகிழ் மன்றங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். 


'கணிசமான எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடிவிட்டோம்' என ரீல்ஸ் போடும் தவெக அரசு மனமகிழ் மன்றங்களை திறக்க துடிப்பது ஏன்? டாஸ்மாக் கடைகளை மூடினாலும், `மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை படு ஜோராக நடந்துவருவதாகப் புகார் எழுகின்றன. அதனொரு பகுதியாக,  தூத்துக்குடியில் இந்திரா நகர் பகுதியில் மனமகிழ் மன்றத்தை அமைக்க அரசு அனுமதி கொடுத்திருப்பதாக தெரிகிறது. குடியிருப்பு பகுதிகளில் அதுவும் பள்ளி குழந்தைகள் நடமாட்டமுள்ள பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி தருவது ஏன்? மனமகிழ் மன்றம் அமைவதை கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் பொதுமக்களுடன் தலைமையில் போராட்டம் நடத்தியுள்ளனர். 


திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் மனமகிழ் மன்றத்திற்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல தவெக அரசும் தூத்துக்குடி மாநகரில் மனமகிழ் மன்றங்கள் திறக்க அனுமதிக்க கூடாது. எனவே இந்திரா நகரில் அமையவுள்ள மனமகிழ் மன்றத்துக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறேன் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தமிழக கபடி அணிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவி தேர்வு

  • Share on