தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.77,300 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தாகுளம் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (42), தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரத்தைச் சேர்ந்த நவீன்ராஜா (26), மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த நாராயணசாமி (40), கோபி கண்ணன் (35), கண்ணன் (37) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூர் பகுதியைச் சேர்ந்த டெல்லிபாபு (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட பேப்பர்கள், 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.77,300 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.