அகில இந்திய பள்ளி குழுமம் நடத்திய தேசிய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கபடி தேர்வில், தமிழகத்திற்காக விளையாட சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான விராங்கனை தேர்வு, நாமக்கல் பாவை இன்ஜி., கல்லூரியில் நடைபெற்றது.
இதில், அகில இந்திய மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கு இடையிலான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில், தூத்துக்குடி மாவட்டம் தல்நேவில் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான, சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுதந்திரா தேவி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் கபடி போட்டியில் தமிழகத்திற்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தேர்வு பெற்ற, தல்நேவில் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுதந்திரா தேவிக்கு, தமிழ்நாடு முன்னணி உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்தி மதிஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.
தேர்வு பெற்ற மாணவியையும், அவருக்குப் பயிற்சி அளித்த தல்நேவில் மாதா பெண்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியை சில்வா பெர்னாந்த் ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி, பள்ளித் தாளாளர் சிறுமலர் மற்றும் ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல் பொன்னையா, பாரதமாதா கபடி அணி பயிற்சியாளர் மருத்துவர் செல்வமணிகண்டன் மற்றும் கபடி ஆர்வலர்கள், கபடி வீரர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.