இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் நாளை (அக்டோபர் 16) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், நினைவிடத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அஞ்சலி செலுத்த வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நினைவிடப் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட காவல்துறை துணைத் தலைவர், நினைவு நாள் நிகழ்ச்சி எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நிகழ்ச்சியின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா, ஆகியோர் உடனிருந்தனர்.