ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைப் பறைசாற்றும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டை வளாகம், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சமின்றி இருளில் மூழ்கிக் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வரலாற்றுச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டை, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நினைவுக் கோட்டை வளாகத்தில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாத நிலை காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரரின் வரலாற்றை பறைசாற்றும் இடம் இருளில் மூழ்கி இருக்கும் நிலை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவிடத்தைப் பராமரிப்பதுடன், அதன் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, வளாகத்தின் நுழைவுப் பகுதி, நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டை வளாகத்தை நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்விளக்குகளைச் சரிசெய்யவும், தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீரத்தின் அடையாளமாகத் திகழும் கட்டபொம்மன் நினைவுக் கோட்டை, இருளின் அடையாளமாக மாறிவிடக் கூடாது என்பதே வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.