• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை வேண்டிய காரணம் இது தான்... மாவட்ட ஆட்சியருக்கு சென்ற கோரிக்கை மனு!

  • Share on


தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குப் பள்ளி கமிட்டி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மேலூர் சத்திரம் தெருவில், இரண்டாவது ரயில்வே கேட் அருகே சுமார் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் மிக அருகில், அதாவது சுமார் 200 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.


இந்த டாஸ்மாக் கடை மற்றும் அதனுடன் இணைந்த பார் வசதியை நாடி வரும் மதுப்பிரியர்கள், தங்களது வாகனங்களைச் சாலையின் இருபுறமும் அராஜகமான முறையில் நிறுத்திச் செல்கின்றனர். இப்பகுதியில் ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறைகள் ரயில்வே கேட் மூடப்பட்டுத் திறக்கப்படுவதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இது காணப்படுகிறது.


இந்நிலையில், சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளதால் பாதுகாப்பு அற்ற சூழலும் நிலவுகிறது.


இதுதொடர்பாக அப்பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் எஸ். சொர்ணலதா மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:


"தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாகப் பள்ளிகள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றத் தமிழக அரசு எடுத்து வரும் அதிரடி முடிவுகள் பாராட்டத்தக்கவை.


அரசின் புதிய விதிகளின்படி, கல்வி நிறுவனங்களின் அருகே கண்டிப்பாக அகற்றப்பட வேண்டிய இடத்தில்தான் இந்த மதுக்கடையும் அமைந்துள்ளது. எனவே, மாணவர்களின் நலன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் சமுதாயப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த டாஸ்மாக் கடையை இந்த இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்."


இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனத்தின் அருகே விதிகளை மீறிச் செயல்படும் இந்த மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Share on

தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா : திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!

குளத்தூர் அரிசிக் கடையிலா இந்த சமாச்சாரம்... 3 பேரை கைது செய்த போலீஸ்!

  • Share on