• vilasalnews@gmail.com

குப்பையில் இருந்து கப்பல் எரிபொருள்... தூத்துக்குடி மாநகராட்சியின் அதிரடித் திட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து கப்பல்களுக்கான ‘பசுமை மெத்தனால்’ தயாரிக்கும் புதிய திட்டத்திற்காக, மாநகராட்சி நிர்வாகமும், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமார் 180 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு தருவைகுளம் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது, இந்தக் கழிவுகளை பயனுள்ள எரிபொருளாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரைச் சேர்ந்த ‘யுனிவர்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் இணைந்துள்ளது.


இது குறித்து  வ.உ.சி.துறைமுகம்  தரப்பில் கூறும்போது :

“சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கப்பல்களுக்குத் தேவையான பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை மெத்தனால் உற்பத்தியில் துறைமுகம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மாநகராட்சியுடன் இணைந்து கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது,” என்றனர்.


குப்பைகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய நகராட்சி நிர்வாகத் துறையிடம் மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், மெத்தனால் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தினமும் 100 டன் குப்பைகள் மெத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

இதற்காக தருவைகுளம் கிடங்கில் 5 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

நிலத்திற்கான வாடகைத் தொகையை துறைமுகம் வழங்கும். மேலும், மாநகராட்சி வழங்கும் குப்பைகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.


  • Share on

கெத்து காட்டி ரீல்ஸ் போடுபவர்களே... தூத்துக்குடி எஸ்.பி எச்சரிக்கை!

மாமன்னர் திருமலை நாயக்கருக்குச் சிலை: அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்பு!

  • Share on