• vilasalnews@gmail.com

திமுக Vs அதிமுக... மாணிக்கராஜா Vs கடம்பூர் ராஜூ... இனி ஓங்கும் கை யாருடையது?

  • Share on

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் 'கடம்பூர்' என்ற ஊர்ப் பெயரைத் தங்களது அடையாளமாகக் கொண்ட இரு துருவங்களாகத் திகழ்பவர்கள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் இளைய ஜமீன்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. இவர்களுக்கு இடையேயான மோதல், ஒரு ஊரின் ஆதிக்கப் போட்டியில் தொடங்கி மாநில அளவிலான அரசியல் திருப்பங்கள் வரை நீண்ட ஒரு சுவாரஸ்யமான வரலாறு.


கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் இளைய ஜமீன்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா ஆகிய இருவரும் அதிமுகவில் பயணப்பட்ட காலங்களில்,  2011 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் மாணிக்கராஜா மற்றும் கடம்பூர் ராஜூ ஆகிய இருவருமே விருப்பம் தெரிவித்தனர்.


ஆனால், ஜெயலலிதா கடம்பூர் ராஜூவையே வேட்பாளராகத் தேர்வு செய்தார். அங்கிருந்துதான் இருவருக்கும் இடையேயான பனிப்போர் பகிரங்க மோதலாக மாறியது.


அதன் பின்னர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக தலைமையை கைப்பற்றுவதில் ஏற்பட்ட பல்வேறு போட்டிகளுக்கு நடுவே, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியை தொடங்கியதும், அமமுகவில் இணைந்த மாணிக்கராஜா அமமுக-வில் தினகரனின் 'தென்மண்டல தளபதி'யாக அறியப்பட்டார்.


தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் மாணிக்கராஜா இடையேயான அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியது. அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜூவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கிய கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றுவதில் மாணிக்கராஜா தீவிரம் காட்டினார்.


அமமுக சார்பில் போட்டியிட்ட மாணிக்கராஜாவின் அணி, அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த வார்டிலேயே அதிமுக-வை வீழ்த்தி சாதனை படைத்தது.


16 வார்டுகளில் 10-ஐ கைப்பற்றி, கடம்பூர் ராஜூவின் சொந்த மண்ணிலேயே அவருக்கு அரசியல் நெருக்கடியைக் கொடுத்தார் மாணிக்கராஜா.


அதோடு நில்லாமல், கடம்பூர் ராஜூக்கு அரசியல் நெருக்கடியை கொடுக்க விரும்பிய கடம்பூர் மாணிக்கராஜா, 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அந்தத் தொகுதியில் போட்டியிடச் செய்ததில் மாணிக்கராஜாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இருப்பினும், அந்தத் தேர்தலில் கடும் போட்டிகளுக்கு இடையே கடம்பூர் ராஜூ மீண்டும் வெற்றி பெற்றார்.


நீண்ட காலம் அமமுக வில் தினகரனின் 'தென்மண்டல தளபதி'யாக அறியப்பட்ட மாணிக்கராஜா, தற்போது அமமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார். இது கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதிகளில் அதிமுக-வின் கடம்பூர் ராஜூவுக்கு புதிய அரசியல் சவாலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.


இந்த மோதல் வெறும் அரசியல் பதவிக்கானது மட்டுமல்ல, கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதியில் யாருடைய கை ஓங்கியிருக்க வேண்டும் என்ற கௌரவப் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.


கடம்பூர் மாணிக்கராஜா திமுக-வில் இணைந்திருப்பது, கோவில்பட்டி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக அதிமுக-வின் கோட்டையாக இருந்த நிலையை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


கோவில்பட்டி தொகுதியில் திமுக நீண்ட காலமாக வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஜமீன் பின்னணியும், அமமுக-வில் இருந்த போது தனக்கென ஒரு தனி வாக்கு வங்கியையும் வைத்திருந்த மாணிக்கராஜா, இப்போது திமுக-வின் பலத்தோடு இணைந்திருப்பது கடம்பூர் ராஜூவுக்கு பெரும் சவாலாக மாறும் என அரசியல் பார்வையாளர்களாகல் கணிக்கப்படுகிறது.


கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் மாணிக்கராஜாவுக்கு இருக்கும் அசாத்திய செல்வாக்கு, இப்போது திமுக-வின் வெற்றிக் கணக்கில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக-வின் மாவட்டச் செயலாளராக இருந்தாலும், அவரது சொந்தப் பகுதியிலேயே மாணிக்கராஜா ஒரு வலுவான எதிர்ப்பாளராக உருவெடுத்து இருந்து வந்த நிலையில், மாணிக்கராஜா திமுகவில் இணைந்திருப்பது கடம்பூர் ராஜூவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும்.


திமுக Vs அதிமுக என்ற கட்சி மோதலையும் தாண்டி, மாணிக்கராஜா Vs கடம்பூர் ராஜூ, இதில் யாருடைய கை ஓங்கியிருக்கிறது?என்ற கௌரவப் போட்டியாகத் தொடர வாய்ப்புள்ளது.


கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் மாணிக்கராஜா  மற்றும் கடம்பூர் ராஜூ இருவரின் சமூக வாக்குகளே தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால், கோவில்பட்டி தொகுதியில் இனி அதிரடி மற்றும் பரபரப்பு அரசியலுக்கு பஞ்சமே இருக்காது.

  • Share on

சென்னையில் முகாமிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்!

விளாத்திகுளம் தொகுதியை விட்டுக் கொடுப்பது யார்? - தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்ததால் எகிறும் எதிர்பார்ப்பு!

  • Share on