தூத்துக்குடியில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வுக்கு குழுவுடன் வந்த சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழுவின் தலைவரான செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேற்று ( நவ.,12 ) ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
இந்தக் குழுவுடன் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக சட்டப்பேரவை இணைச் செயலாளர் ரமேஷ் ( 57 ) என்பவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவரை சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுக்கணக்கு குழு தலைவரான செல்வப் பெருந்தகை, எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற இருந்த பொது கணக்கு குழுவின் ஆய்வு பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிர் இழந்தார். இதை அடுத்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.




