தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகாரின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 61 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக மனுக்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், தலைமை காவலர் சுப்புராஜ், காவலர்கள் பேச்சிமுத்து, திலிப், எடிசன், புவனேஷ் மற்றும் வசந்தபெருமாள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை கொண்டு கண்டுபிடித்தனர்.
பின்னர்,கண்டு பிடித்த செல்போன்களை அந்த பகுதியில் உள்ள சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதற்கு முன்னர் கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும் 09.12.2020 அன்று 60 செல்போன்கள் கண்டுபிடிக்க பட்டது. அதன்பிறகு மூன்றாவது முறையாக சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 61 செல்போன்களை கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை இன்று 12.02.2021 (வெள்ளிக்கிழமை) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, உங்கள் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அங்கு வந்த போது மக்களிடம் எங்கள் நிருபர் கேட்ட போது, காவல்துறை அதிகாரிகள் இவ்வளவு சீக்கிரமா எங்கள் செல்போன்களை கண்டு பிடித்து தருவார்கள் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது. என கண்ணீர் மல்க காவல்துறையிணர்க்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.