கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு, மரியாதை செலுத்தினார்.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் மற்றும் மணிமண்டபம் உள்ளது. தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நினைவிடத்தில் உள்ள நினைவு சின்னம் முன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் மணி மண்டபத்திலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் வருகை பதிவேட்டில் கருத்துக்களை பதிவிட்டார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வந்தார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் இல்லத்துக்கு சென்ற அமைச்சர், வ.உ.சிதம்பரனாரின் புகைப்படங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள அவரது சுதந்திரப் போராட்டத்தை எடுத்துரைக்கும் புகைப்படங்களை பார்வையிட்டு, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரங்கி குண்டு மற்றும் அவர் பயன்படுத்திய வாள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் வீரசக்கதேவி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக பாஞ்சாலங்குறிச்சி வந்த அமைச்சரை வீரபாண்டி கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.



