மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தில் அதிரடி மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சமையல் எரிவாயுவை பதுக்குவதைத் தவிர்க்கவும், அனைத்து நுகர்வோருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும், இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடைப்பட்ட குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 15 நாட்களில் இருந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 25 நாட்களாக மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்முஸ் முனை மூடப்பட்டிருப்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது விநியோகச் சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு வளைகுடா நாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளதால், தற்காலிகமாக இந்த கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலரைத் தாண்டாத வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. தற்போது இது 100 டாலர் அளவிலேயே உள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவு உள்ளது. விநியோகத் தடைகளைச் சமாளிக்க இந்தியா மாற்றுப் பாதைகள் மூலம் இறக்குமதியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா விமான எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நிலையில் இருப்பதால், அது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்கள்:
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கான விநியோகத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த மூன்று உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுநலச் சேவைகளுக்கு வணிக ரீதியிலான விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
