• vilasalnews@gmail.com

நீதிமன்றம் கடந்த வாரம் தானே கேட்டது; அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?

  • Share on

தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்றுப் பேசிய நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், விஜய் பிரச்சாரம் தொடர்பான வழக்கில் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்று நீதிமன்றம் கடந்த வாரம் தான் கேட்டிருந்தது. மேலும், தலைவர் தானே தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியிருந்தது குறிப்பிட தக்கது. 


தமிழ்நாடு முழுக்க தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார். வார வாரம் சனிக்கிழமைகளில் அவர் பல்வேறு ஊர்களுக்கும் போய் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படித் தான் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அங்கு ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


கடந்த வாரம் தான் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுப்பதாகச் சொல்லி, தவெக துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முன்பு திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை. அதன் பிறகே கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி கொடுத்தனர். இதைச் சுட்டிக்காட்டியே நீதிமன்றத்தில் நிர்மல் குமார் தரப்பு வழக்கு போட்டது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விஜய் தரப்பை அப்போதே எச்சரித்திருந்தது. தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவாக நீதிபதிகள் கேட்டிருந்தனர். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது என்றும், தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள்  ஒழுங்குபடுத்த வேண்டாமா என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


மேலும், அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு பொதுவான வழிமுறைகளை வகுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். மேலும், இது போன்ற பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டைச் சம்பந்தப்பட்ட கட்சியிடமே வசூலிக்குமாறும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது போல பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் கூறியிருந்தனர்


அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு வாரத்திற்கு முன்பே நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தலைவர் தானே தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தனர். நீதிமன்றம் இதுபோல எல்லாம் கேட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. அனைவரும் அச்சப்பட்டது போல அசம்பாவிதம் நடந்துவிட்டது.


இப்போது இறந்த உயிர்களுக்கு பொறுப்பேற்பது யாரோ?


  • Share on

கரூர் சம்பவம்... பிரேமலதா விஜயகாந்த் சொல்லும் காரணம்!

கரூர் துயரம் ... இப்ப சொல்லுங்க யார் காரணம் : அண்ணாமலை!

  • Share on