விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் புகைக்கூண்டு வழியாக வீட்டிற்குள் இறங்கிய பிரபாகரன் 35, மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மம்சாபுரம் கீழூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி ( 25 ) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், மனைவி ராமலட்சுமி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டிற்கு வந்து மனைவியை பிரபாகரன் சமாதானம் செய்து அழைத்தார். அதற்கு நாளை வருவதாக ராமலட்சுமி கூறியுள்ளார். பிரபாகரன் தனது வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து, நேற்று மதியம் ராமலட்சுமி வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. அக்கம் பக்கம் விசாரித்த போது, இரவில் வீட்டுச் சாவியை காணவில்லை என பிரபாகரன் தேடிக்கொண்டிருந்ததாகவும், பின்னர் வாளியில் கிடந்த சாவியை எடுத்து ஜன்னலில் வைத்திருந்ததாக கூறியுள்ளனர்.
பின்னர், ராமலட்சுமி சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது புகைக்கூண்டின் வழியாக பிரபாகரன் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் வந்து புகைக்கூண்டை உடைத்து பிரபாகரன் உடலை மீட்டனர். மேலும், மம்சாபுரம் போலீசார் விசாரித்தனர். இதில் புகைக்கூண்டின் மேல்பகுதி அகலமாகவும் கீழ் பகுதி குறுகலாகவும் இருப்பதால் கீழே இறங்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபாகரன் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.



