கலைஞர் உரிமைத் தொகை பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும், தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்:-
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயம் அவர்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் 4ஆம் கட்டமாக நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும்.
வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



