சட்டசபை கேள்வி நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் ஊராட்சிகள் இணைப்பு ஏன் என்பது குறித்து பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சிகளுடன் இணைப்பதில் விருப்பம் இல்லை என்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் 120 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றார்.
கோவை மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு சில ஊராட்சி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக மலுமிச்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். சில கடைகளுக்கு முன்பு கருப்பு கொடியும் கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதேபோல் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள், அப்பாத்துரை ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி வார்டுகளை 100இல் இருந்து 120 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மதுரை மேற்கு பகுதியில் துவரிமான், நாகமலை, கரடிப்பட்டி, ஏற்குடி, அச்சம்பத்து, பெருங்குடி பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை போலீஸ் ஸ்டேஷன் ரோடு அருகே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கோரம்பள்ளம் ஊராட்சியில் ராஜபாண்டி நகர், பெரியநாயகபுரம், அந்தோணியார்புரம், ராஜபாண்டி நகர், ஸ்ரீநிநகர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள் உள்ளது. இங்குள்ள வாழ்வாதாரம் விவசாயம், கூலி வேலை மற்றும் நூறு நாள் வேலை மட்டுமே.
கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை பறிபோகும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குடிநீர் கட்டணம், வீட்டுவரி கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்து மக்களின் நலன் கருதி கோராம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை அளித்தனர்.
இந்நிலையில், நேற்று சட்டசபை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், " ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. ஊராட்சிகள் எந்த வகையில் இணைக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் 371 ஊராட்சிகளை மட்டுமே நகர்ப்புற அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நகராட்சி மாநகராட்சிகளுடன் இணைப்பதில் விருப்பம் இல்லை என்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் 120 நாட்களுக்குள் கூறினால் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இல்லாமல் போய் விடும் என்று ஊராட்சிகளில் உள்ள மக்கள் நினைக்கின்றனர். ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத இடங்களையே நகர்ப்புற அமைப்புகளோடு இணைக்கிறோம்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.



