• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

25 தொகுதிகளில் திமுக போட்டி! வேட்பாளர் ரெடி! யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?

  • Share on

இந்த ஆண்டு நடைபெறக்கூடிய மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை திமுக உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மக்களைவைத் தேர்தலில் திமுக 20 பேரை நிறுத்தியது. 4 இடங்களில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களான விசிக, இந்தியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இவை போக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை 4 இடங்களிலும், 9 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டது. இதில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

ஆனால், இந்த முறை திமுக 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். அதன்படி வடசென்னையின் தற்போதைய எம்.பி.ஆக கலாநிதி வீராசாமி இருக்கிறார். அவருக்கே இந்த முறையும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

தென் சென்னையும் திமுக கைவசம்தான் உள்ளது. அதன் தற்போதைய எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன். அவர் இந்த முறையும் சீட்டு கேட்கிறார். ஆனால், தொகுதி கள நிலவரம் அவருக்கு எதிராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தொகுதியில் கனிமொழி போட்டியிடவும் விரும்புகிறாராம்.

மத்திய சென்னையின் எம்.பி ஆக தயாநிதிமாறன் இருக்கிறார். இம்முறையும் அவரே இந்த தொகுதி களத்தில் இறங்குவார். 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக எம்.பி.ஆக இருப்பர் டி.ஆர்.பாலு. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவரே இந்தமுறையும் களம் காண இருக்கிறார். கடந்த முறை போல் அவர் எளிதாக வெல்ல முடியாது என்கிறது கள நிலவரம். வேறு தொகுதிக்கு மாறும்படி பாலுவுக்குச் சிலர் ஆலோசனை தந்து வருகிறார்கள். ஆனால், அவர் அதற்கு செவி கொடுக்க வில்லையாம்.

சென்னையை ஒட்டி மாவட்டங்களில் முக்கியமானது காஞ்சிபுரம் ஆகும். அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி.செல்வம். இதுவும் திமுக கையில் உள்ள தொகுதிதான். ஆனால், இந்த முறை இத்தொகுதியின் மேல் விசிக கண் வைத்துள்ளதாம். இறுதியாக யாருக்கு இந்தத் தொகுதி யாருக்கு என்பதை திமுக தலைமை கையிலே உள்ளது.

அடுத்து அரக்கோணம், இதன் தற்போதைய எம்.பி ஜெகத்ரட்சகன். பல பலம் படைத்த மிகப்பெரும்புள்ளி. ஆகவே அவரே மீண்டும் போட்டியிடுக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை அவர், வேறு தொகுதியில் நிற்கத் திட்டமிட்டால், காங்கிரஸ் இந்தத் தொகுதியைக் கேட்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கைக்கு இத்தொகுதி போனால், ராமச்சந்திரன் வேட்பாளராக நிற்பார் என சொல்லப்படுகிறது.

வேலூர் தொகுதி என்றாலே அது துரைமுருகன். அவர் மண்ணின் மைந்தர். இப்போது அவரது மகன் கதிர் ஆனந்த் தான் எம்.பி.ஆக இருக்கிறார். கடந்த முறை கடைசி நேரம் வரை இவருக்குப் பல சிக்கல்கள் இருந்தன. இந்த முறையும் மத்திய அரசின் கழுகுப் பார்வைக்குள் உள்ளார் கதிர் ஆனந்த். அத்துடன் தொகுதி மக்களிடமும் கொஞ்சம் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும், திமுகவில் அசைக்க முடியாத தூண் துரைமுருகன். முதலமைச்சர் ஸ்டாலினின் அன்புக்குள்ளவர். ஆகவே திரும்ப மகனுக்கு சீட் பெற்றுத் தந்துவிடுவார் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மீண்டு கதிர் ஆனந்த் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதற்குத்தான் வாய்ப்புகள் அதிகமாம்.

இந்த தொகுதிக்கு மாறலாமா என்று ஜெகத்ரட்சகன் ஒரு பக்கம் கணக்குப் போட்டுக் காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள். கூடுதல் நெருக்கடியாக வேலூர் மேயர் சுஜாதாவும் இந்த தொகுதியில் நிற்க சீட் கேட்டு பலரிடம் பேசி வருவதாகத் தெரிகிறது.

அப்படியே இந்தப் பக்கம் வந்தால் திருவண்ணாமலை தொகுதி. அதன் தற்போதைய எம்.பி. சி.என். அண்ணாதுரை. இவரது செல்வாக்கு திமுகவில் பெரிய அளவில் இப்போது இல்லை என கூறப்படுகிறது. திரும்ப இவரே நிறுத்தப்படுவாரா என்பது கடைசி நேரம் வரையான ஹாட் டாப்பிக்காகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தொகுதியை ஒட்டியே உள்ளது விழுப்புரம் தொகுதி. அங்கே விசிகவை சேர்ந்த ரவிக்குமார் எம்.பி.ஆக இருக்கிறார். இவர் விசிகவை சேர்ந்தவராக இருந்தாலும் திமுகவின் வட்டாரத்தின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருகிறார்.

கட்சித் தலைவர் விசிக சின்னத்தில் நிற்க வற்புறுத்தியும் கேட்காமல் கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். இந்த முறையும் அதே சூத்திரத்தை கடைப்பிடிக்கவே இவர் திட்டமிட்டு வருகிறார்.

அடுத்தது கள்ளக்குறிச்சி தொகுதி. இங்கே நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக பொன்முடி மகன் கவுதம் சிகாமணி. மகன் கவுதம் சிகாமணிக்கு சீட் பெற்றே தீர வேண்டும் என முழு முயற்சியில் உள்ளார் பொன்முடி. 

கள்ளக்குறிச்சியை ஒட்டியே உள்ள தொகுதி சேலம். இதன் எம்.பி ஆக இருப்பவர் எஸ்.ஆர். பார்த்திபன். தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு தாவியவர். ஆகவே சீட் கொடுக்கப்பட்டது. வெற்றியும் பெற்றார். இந்த முறை இவருக்குப் போட்டியாக களம் இறங்கக் காய்களை நகர்த்தி வருகிறார் பி.கே.பாபு. இவர் வேறு யாருமல்ல, சின்னவர் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகி. ஆகவே, அங்கே பாபு செல்வாக்கு கூடுதலாக உள்ளது.

மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழிக்கு ஒரு ஆசை உள்ளது. அவரும் இந்தத் தொகுதியை கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இது போதாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு தனது மகனுக்காக இந்தத் தொகுதியை குறிவைத்திருக்கிறார். எனவே பலமுனைப் போட்டியில் சிக்கி உள்ளது சேலம் தொகுதி.

நாமக்கல் தொகுதி கொங்கு மக்கள் தேசிய கட்சியில் உள்ளது. ஏ.கே.பி சின்னராஜ் தான் நடப்பு எம்.பி. இதில் வேட்பாளர் மாறலாம். ஆனால், அதே கட்சியின் நபர் தான் போட்டியிடுவார் என்ற பேச்சுதான் அடிபடுகிறது.

கடந்த முறை ஈரோடு தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த கணேச மூர்த்தி களம் கண்டு வென்று இருந்தார். இந்த முறை காங்கிரஸ் இதைக் கேட்பதால் மாறுதல்கள் நிகழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மாறினால் விருதுநகரில் மதிமுக களம் காணலாம்.

நீலகிரி இதுவரை ஆ.ராசாவின் கோட்டையாக உள்ளது. அந்தக் கோட்டையில் பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன் ஓட்டையைப் போடப் பலகட்ட முயற்சிகளைச் செய்து வருகிறார். மீண்டும் ராசாதான் திமுகவின் சாய்ஸ். குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளாராம் ஆ.ராசா.

பொள்ளாச்சி தொகுதி திமுக கையில் உள்ளது. கே.சண்முகசுந்தரம் தான் அதன் எம்.பி. இந்த முறை இங்கே மாற்றம் வரலாம். இதை மக்கள் நீதி மய்யம் கேட்பதாக கூறப்படுகிறது. அங்கே டாக்டர் மகேந்திரன் மநீம சார்பாக களம் காண உள்ளார். அதற்காக திமுகவிடம் கமல் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துள்ளார் என்கிறார்கள்.

ஆனால், கோவை தொகுதியே மகேந்திரன் மனதில் இருக்கிறது. கோவையில் மநீக நின்றால், பொள்ளாச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படலாம்.

தற்போதைய திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி. இந்த முறையும் இவரேதான் போட்டியிடுவார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறது ஆளும் கட்சி வட்டாரம். இன்னொரு பக்கம் திண்டுக்கல்லை காங்கிரஸ் கைப்பற்ற முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. கரூர் எம்பி ஆன ஜோதிமணி, இந்த முறை திண்டுக்கல் பக்கம் நிற்கலாம் என விரும்புகிறாராம்.

பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் பச்சை முத்து. போனமுறை திமுக சின்னத்தில் நின்று வென்றார். இந்த முறை பாஜக அணியில் இருக்கிறார். ஆகவே கே.என்.நேரு அந்தத் தொகுதியை தனது மகனுக்குக் கேட்டு வாங்கி விட்டதாகவே சொல்லப்படுகிறது.

கடலூர் தற்போதைய எம்.பி. ரமேஷ். இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. ஆகவே, அவர் கட்டாயம் மாற்றப்படுவார் என்கிறார்கள். அதற்குப் பதிலாக இங்கே எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன் போட்டியிட உள்ளார். அது நூறு சதவீதம் உறுதியான தகவல் என்கிறது கட்சி மேலிடம்.

மயிலாடுதுறை எம்பி. ராமலிங்கம். முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். அவர்தான் இந்த முறையும் என்கிறார்கள். கட்சியில் போட்டி இல்லை என்றாலும் இந்தத் தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என காங்கிரஸ் கனவு கண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கனவு பலித்தால் களத்தில் கே.எஸ்.அழகிரி இறங்குவார் என்கிறார்கள்.

தஞ்சாவூர் எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கம். இதில் மாற்றம் இருக்காது என்பதே இப்போதைய நிலவரம். இதைப்போல தூத்துக்குடியிலும் எந்த மாற்றமும் இருக்காது. அங்கே இப்போது எம்.பி ஆக உள்ள கனிமொழியே களத்தில் முன்னணியில் உள்ளார். அந்த சீட் திமுகவுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று என்கிறார்கள். இருந்த போதிலும், அங்கு மேயர் ஜெகன் பெரியசாமியை எம்பி ஆக்கி, தனது அரசியல் இடையூறுகளை சரிகட்டலாம் என்ற ஒரு ராஜதந்திர திட்டமும் மாவட்ட செயலாளர் அக்காவிடம் இருக்கிறதாம்.

தனுஷ் எம் குமார் தென்காசியின் எம்.பி ஆக இருக்கிறார். இவரே இம்முறையும் நிறுத்தப்படுவார் என சொல்லப்படுகிறது. திருநெல்வேலியில் எம்.பி ஞானதிர வியம் இந்த முறை நிற்க தேவை இல்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகப் பேச்சுகள் ஒலிக்கின்றன.

அவர் தனக்குப் பதிலாகத் தனது மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் உள்ளூர் கட்சி பிரமுகர்கள். கூடுதலாக ஹெலன் டேவிட்சன் மற்றும் கிரஹாம்பெல் ஆகிய இருவரும் இந்த தொகுதியைக் கேட்டு வருகிறார்கள் என்கிறார்கள்.

தருமபுரியில் பாமக அன்புமணி நிற்க திட்டமிட்டு வருகிறார். அவர் திமுக அணியில் இல்லை. டாக்டர் செந்தில்குமார்தான் திமுக எம்பி ஆக உள்ளார். அவரே இந்த முறை நிற்க வேண்டாம் என நினைப்பதாக சொல்கிறார்கள்.

கடந்த முறை தேர்தலுக்காகச் செய்த செலவையே இன்னும் அடைக்கமுடியாமல் தவித்து வருகிறாராம். ஆகவே, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தொடர்பாக தற்போது உலா வரக்கூடிய எல்லா யூகங்களையும் கணிப்புகளையும் முடிவுக்கு கொண்டு வருவது திமுக அதிகாரபூர்வமான அறிவிப்பால் மட்டுமே முடியும்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பொன்முடியின் சிறை தண்டனை- நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை.. அப்படினா யாருக்கு அதிகாரம் இருக்கு?

  • Share on