தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படையத் தொடங்கியுள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திமுக அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வழங்கப்பட்டது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தேமுதிகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பது திமுகவிற்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் மதிமுக குழுவினரிடையே முதற்கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், கடந்த முறையை விடக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் கூறப்படுவதால் மதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக இந்த முறை திமுகவிடம் கோரியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் கூறுகையில்:
வரவிருக்கும் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் களம் காணும் என்பதில் மாற்றமில்லை. எத்தனை இடங்கள் என்பது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளது; திமுக அழைக்கும்போது அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தனித்துப் போட்டியா என்பது போன்ற யூகங்கள் நிலவிய சூழலில், "தனிச் சின்னத்தில் தனித்து நிற்போம்" என்கிற மதிமுகவின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.



