நேபாளத்தின் வடக்கு ராசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரத்தாண்டவமாடிய வெள்ளம் : உள்கட்டமைப்புகள் கடும் சேதம்
வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியே உருக்குலைந்துள்ளது. வெள்ளத்தின் சீற்றத்தில் சுமார் 19 பாலங்கள், 40 கிலோமீட்டர் தூர சாலைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் முழுவீச்சில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், நீர்மட்டம் அபாயகரமான அளவில் உயர்ந்து காணப்படுவதால் பல இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்களை தரையிறக்குவதில் கடும் சவால்கள் நீடித்து வருகின்றன.
சிக்கிய 57 தமிழர்கள் : 22 பேர் பத்திரமாக மீட்பு
புனித யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 57 தமிழர்கள், ராசுவா மாவட்டத்தின் ‘திமுர்’ பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்தனர்.
இவர்களில் கும்பகோணத்தைச் சேர்ந்த 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது நேபாள ராணுவ முகாமில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தமிழர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
384 சுற்றுலாப் பயணிகள் மாயம் : சுற்றுலா வாரியம் தகவல்
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் மொத்தம் 384 பயணிகள் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 291 பேர் வெளிநாட்டினர் என்றும், 93 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப் பாதிப்பில் 400-க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.