• vilasalnews@gmail.com

வங்கதேசத்தில் புதிய சகாப்தம்: தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பு – இந்தியாவுடனான உறவில் புதிய திருப்பம்!

  • Share on

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான் அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த அரசியல் மாற்றம் அண்டை நாடான இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்தின் ஜவுளித் தலைநகரான திருப்பூருக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.


கடந்த காலங்களில் இந்தியாவைப் போலவே வங்கதேசத்தின் ஜவுளி ஏற்றுமதிக்கும் அமெரிக்கா அதிக வரிகளை விதித்திருந்தது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான ஜவுளித் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இந்த நிலையை மாற்ற, வங்கதேச இடைக்கால அரசு அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.


வங்கதேசப் பொருட்களுக்கான பொதுவான இறக்குமதி வரி 37% சதவீதத்திலிருந்து 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஜவுளிப் பொருட்களுக்கு 0% வரி சலுகையை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த 0% வரி சலுகைக்குப் பின்னால் அமெரிக்கா ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது, அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்து, அதைக் கொண்டு ஆடை தயாரித்து அனுப்பினால் மட்டுமே இந்த வரிவிலக்கு பொருந்தும்.


இதுவரை வங்கதேசம் தனது ஜவுளித் தேவைக்கான பெரும் பகுதி பருத்தியை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்து வந்தது. ஆனால், புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், இனி வங்கதேசம் இந்திய பருத்தியை தவிர்த்து அமெரிக்க பருத்தியை நாட அதிக வாய்ப்புள்ளது. இது இந்தியப் பருத்தி ஏற்றுமதியாளர்களையும், நூல் மில்களையும் நேரடியாகப் பாதிக்கும்.


பங்களாதேஷ் ஃபர்ஸ்ட் - வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேர்தலுக்கு முன்னதாக 'தி டிப்ளமேட்'  இதழுக்கு அளித்த பேட்டியில் தாரிக் ரஹ்மான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது வெளியுறவுக் கொள்கை முழுக்க முழுக்க பொருளாதார முன்னேற்றத்தைச் சுற்றியே இருக்கும்.


முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. ஆனால், தாரிக் ரஹ்மான் பங்களாதேஷ் ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை முன்வைக்கிறார். இது இந்தியாவுடனான முந்தைய சுமூக உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படுகிறது.


வங்கதேசம் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஐடி, செமிகண்டக்டர், காலணிகள் மற்றும் விவசாயம் போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், ஜவுளித் துறையில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பின்னடைவைத் தரும்.


அமெரிக்க சந்தையில் இந்தியத் தயாரிப்புகளை விட வங்கதேசத் தயாரிப்புகள் விலை குறைவாகக் கிடைக்கத் தொடங்கினால், திருப்பூருக்கான ஆர்டர்கள் குறையக்கூடும். எனவே, வங்கதேசத்தின் இந்தப் புதிய அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளை இந்தியா மிகவும் கவனமாக அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

  • Share on

எங்களை மோசமாக நடத்தினீர்கள்... அமெரிக்காவைப் பார்த்து பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப்பின் பகீர் கேள்வி!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாரா? ஈரான் - அமெரிக்கா நேரடி மோதல்!

  • Share on