• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி முகமூடிக் கும்பல் செய்த அட்டூழியம்!

  • Share on

தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் முகமூடி அணிந்து வந்த 6 மர்ம நபர்கள், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ரூ. 20 லட்சத்தைக் கொள்ளையடித்துத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மட்டக்கடை நாட்டுக்கோட்டை தெருவில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தைத் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜார்ஜ் ஜெப்ரின் (40) மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் 3 இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 6 மர்ம நபர்கள், நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடியை அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, நிறுவனத்தில் இருந்த ஜார்ஜ் ஜெப்ரினைக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அங்கிருந்த ரூ. 20 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.


இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார், நிதி நிறுவனம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில், நிதி நிறுவனத்தில் கொள்ளை நடைபெறுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஒருவர் ரூ. 20 லட்சம் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் துல்லியமாக அறிந்தே கொள்ளையர்கள் நோட்டமிட்டு, திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


பட்டப்பகலில் தனியார் நிதிநிறுவனத்தில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.20 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நிலை என்ன?

  • Share on