• vilasalnews@gmail.com

இரை தேடிப் போன ஆடுகள்... இடி மின்னலுக்கு இரையாகிப் போன இளைஞர் : தூத்துக்குடியில் நெஞ்சை உலுக்கிய சோகம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின்போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி, 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் மதன்குமார் (24), தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். இன்று மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், அவரது ஆடுகள் வீட்டின் அருகேயுள்ள சாலையில் மேய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


மழையில் நனைந்து கொண்டிருந்த ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மதன்குமார் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடி மின்னல் அவரைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.


இதுகுறித்த தகவல் கிடைத்ததும், புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். உயிரிழந்த மதன்குமாரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற இளைஞர், இடி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் சோகம் : பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் கார் ஓட்டுநர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் அவசர அறிவுறுத்தல்!

  • Share on