இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான அருள்மிகு வீர சக்கதேவி ஆலயம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்தின் நிர்வாகத்திற்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் கூட்டமானது, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் ஆண்கள், பெண்கள் என குடும்பமாக வந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்தின் நிர்வாகத்திற்கான புதிய தலைவராக கல்லூரணி மாஜி ஜமீன்தார் கண்ணன் என்பவரை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இதனையடுத்து, புதிய தலைவர் கல்லூரணி மாஜி ஜமீன்தார் கண்ணன் தலைமையில், செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள், வீர சக்கதேவி ஆலயத்தில் வழிபாடு செய்து, கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் செல்வராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
