தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி சமூக விரோதிகளால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், கொலை நடந்து மூன்று நாட்களாகியும் குற்றவாளிகள் எவரும் இதுவரை பிடிபடவில்லை. இதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறுதியளித்தும் அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையின் தாமதத்தைக் கண்டித்து இன்று காலை ஆறுமுகநேரியில் செந்தூர் மகாராஜன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர். குற்றவாளிகளை தாமதமின்றி கண்டறிந்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி போலீசார் மற்றும் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், இன்னும் சில தினங்களில் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என டிஎஸ்பி உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாணவி படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யக் கோரியும் வேடநத்தம் கிராம மக்கள் தலைமையில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, குறுக்கு சாலை பகுதியில் சாலைமறியல் போராட்டம் நேற்று முன்தினம் பல மணி நேரமாக நீடித்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரின் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டாலும்,
நேற்று கோவில்பட்டியில் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி நிகழ்வு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜக கண்டன ஆர்ப்பாட்டம், இன்று ஆறுமுகநேரியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் என வேடநத்தம் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஒவ்வொரு திசைகளிலும் மாறி மாறி போராட்டம் தொடர்ந்து தான் வருகிறது.

