திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெருந்திட்டப் பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாழிக்கிணறு வரையிலான சுற்றுப்பேருந்து சேவை, தற்போது மீண்டும் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்த வசதி மீண்டும் கிடைப்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் கோவில் வளாகம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக 2025-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டுமானப் பணிகள் உச்சகட்டத்தை எட்டியதால், பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி கருதி பேருந்துகள் தேரடி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிக்குச் செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டிய சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 2025 ஜூலை 7-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்காகக் கட்டப்பட்ட புதிய சஷ்டி மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிரம்மாண்ட நுழைவாயில் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், தற்போது பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து நாழிக்கிணறு நுழைவாயில் வரை பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கப்படுகின்றன. தற்போது 3 சுற்றுப்பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் பழையபடி நாழிக்கிணறு வரை செல்வது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

