தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த மார்ச் 10-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி, "சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக மீட்கப்பட்டது" என செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல் சிதைக்கப்படாமல், முழுமையாகவே கண்டெடுக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என்பது குறித்து இப்போதே கூற முடியாது. உடற்கூராய்வு (Post-mortem) அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகே இது குறித்த உண்மைத் தன்மை தெரியவரும்.
வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் உண்மைத் தன்மை தெரியாமல், தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
உயிரிழந்த சிறுமியின் பெயர் அல்லது புகைப்படத்தை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு சமூக வலைதளங்களிலும் பகிரக்கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். விதிகளையும் மீறி சிறுமியின் அடையாளத்தையோ அல்லது தவறான செய்திகளையோ பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
தற்போது சிறுமியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
