தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (12.03.2026) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் தங்கு தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 6,13,097 வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகளும், 13,142 வணிக ரீதியிலான எரிவாயு இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. வணிக இணைப்புகளில் குறிப்பாக 6,309 இணைப்புகள் உணவகங்களுக்கும், 1,026 இணைப்புகள் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சார்ந்த விடுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 1,671 கிலோ லிட்டர் பெட்ரோலும், 2,337 கிலோ லிட்டர் டீசலும் தற்போது கையிருப்பில் உள்ளதாக எரிவாயு விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், அரசு மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு எரிவாயு விநியோகத்தில் எவ்வித தாமதமும் இருக்கக்கூடாது. எரிவாயு இருப்பு மற்றும் விநியோகம் குறித்த தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை விநியோகத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது தட்டுப்பாடோ ஏற்படும் சூழல் உருவானால், அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, போதிய அளவு எரிபொருளை இருப்பு வைத்து தடையின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
