தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் உப்பளங்களை அழித்துவிட்டு புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியை ஒட்டியுள்ள முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றனர்.
முத்தையாபுரம் முதல் புல்லாவெளி வரை சுமார் 3,000 ஏக்கர் நிலத்தை கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு கையகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலங்கள் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசிடமிருந்து முறையான அறிவிப்போ அல்லது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களோ நடத்தப்படவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று முள்ளக்காடு பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தென்கொரிய நிறுவன அதிகாரிகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர், தனியார் சர்வே ஊழியர்களுடன் நிலத்தை அளவீடு செய்ய வந்தனர். இதைக் கண்ட தொழிலாளர்கள் கொதித்தெழுந்து நில அளவீட்டுப் பணியைத் தடுத்தனர்.
தகவல் முறையாகத் தெரிவிக்கப்படாததைக் கண்டித்து, முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
