வேடநத்தம் பகுதியில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே இது காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்தியாகிவிட்டன. மாணவியைக் காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்தபோது, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராடும் மக்களிடம், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏன் சமாதானம் பேச வேண்டும்? வழக்கை நீர்த்துப்போகச் செய்யவோ அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றவோ அரசு முயல்கிறதா என்ற சந்தேகம் எழுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்திருந்தால் மக்கள் போராட்டம் ஓய்ந்திருக்கும். அதை விடுத்து திமுகவினர் சமாதானம் பேசுவது எதையோ மறைக்க முயற்சிப்பதைப் போல உள்ளது.
வேடநத்தம் மாணவி வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
