தூத்துக்குடி அருகே 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக அண்ணாமலை, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திறனற்ற தி.மு.க. ஆட்சியின் கையாலாகாதனத்தால் இன்னும் எத்தனை மகள்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் நடந்துள்ள தொடர் குற்றங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மதுராந்தகம் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்முறை, நாமக்கல் 7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, கிருஷ்ணகிரியில், சில வாரங்களுக்கு முன் இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டது. இவை அனைத்தும் தமிழகம் முற்றிலுமாக பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருவதையே காட்டுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். தி.மு.க அரசுக்கு மக்கள் மீதோ, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தோ துளியும் கவலை இல்லை என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
சமூக அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கில் அரசுக்கு பொறுப்பில்லை. மது மற்றும் போதைப் பொருட்கள் 24 மணி நேரமும் தடையின்றி கிடைப்பது, குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டு, அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழகத்தின் தாய்மார்களும் குழந்தைகளும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விளம்பர உலகில் கற்பனையில் வாழ்ந்து வருவதாக அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் நிலவும் அச்ச நிலையை முதல்வர் எப்போது உணரப்போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இதற்கு மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். தனது எக்ஸ் பதிவில்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூரமான படுகொலைச் செய்தியைக் கேட்கும்போது சொல்லொண்ணா வேதனையாக உள்ளது. ஊழல் நிறைந்த மற்றும் திறமையற்ற இந்த தி.மு.க ஆட்சியில், நமது பெண் குழந்தைகளும், சகோதரிகளும் தினசரி இத்தகைய வன்முறைகளை எதிர்கொள்வது மிகுந்த மனவலியைத் தருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. தமிழக மக்கள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இத்தகைய இக்கட்டான சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தமிழக காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தனது பதிவில் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
