• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அடுப்பு எரியாத சூழலா... என்ன நடக்கிறது?

  • Share on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.


ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு, சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், எரிவாயு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.


இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, எரிவாயு நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளுக்குத் தேவையான எரிவாயு கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்கும் என முகவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலை நீடித்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் அடுத்த சில தினங்களில் முற்றிலுமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும், என அவர் கவலை தெரிவித்துள்ளார். ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். உணவகங்களைச் சார்ந்துள்ள முதியவர்கள், வெளியூர் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும்.


இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களுக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி லாரி ஷெட் உரிமையாளர் கொலை வழக்கில் உறவினர் கைது... கொலைக்கான காரணம் என்ன?

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on