கோரம்பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் காஞ்சனாதேவி. இன்று இவரது வீட்டின் முன்புறம் திடீரென பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும், நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் முன்பக்கத் தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் சிவசக்தி நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை விரைவாக மீட்டு அச்சுறுத்தலைப் போக்கிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
