தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக போலி வாகன காப்பீடு ஆவணங்களைத் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2024 பிப்ரவரி 20-ம் தேதி, மணியாச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பால்பாண்டி என்பவர், தனக்கு விபத்தை ஏற்படுத்திய வாகனத்திடமிருந்து இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடினார். அந்த வாகனத்திற்கு HDFC ERGO நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இருப்பினும், அந்த காப்பீடு சான்றிதழை ஆய்வு செய்த காப்பீட்டு நிறுவன மேலாளர் ராஜேஷ், அது முற்றிலும் போலியானது என்பதைக் கண்டறிந்து புகார் அளித்தார். இந்த புகாரே ஒரு மிகப்பெரிய மோசடி கும்பலை அடையாளம் காட்ட தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் இணையதளம் வழியாக நான்கு சக்கர வாகனங்களுக்கு, இருசக்கர வாகனத்திற்கான மிகக்குறைந்த காப்பீட்டுத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
பின்னர் கணினி மென்பொருட்களைப் பயன்படுத்தி, அந்த ரசீதில் வாகனத்தின் வகை, உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்றி அசல் போன்றே போலி காப்பீடு பாலிசிகளை உருவாக்கியுள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலி பாலிசிகளைப் பொதுமக்களிடம் வழங்கிப் பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய தென்காசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (பி.இ பட்டதாரி, முன்னாள் காப்பீட்டு நிறுவன ஊழியர்), தென்காசியைச் சேர்ந்த தங்கராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த தங்கப்பாண்டி, தூத்துக்குடியைச் செந்தில்வேல் முருகன், மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய 5 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சங்கரலிங்கம், பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
