தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான எட்டையபுரம் சாலையில் உள்ள தனியார் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலையிலிருந்து வெளியேறும் அடர் கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி - எட்டையபுரம் சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலை நீண்டகாலமாக இயங்கி வருகிறது. அந்த வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான 'டயபர்' தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. மேலும், பேப்பர் பஞ்சு தயாரிக்கும் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கம் போல ஆலை இயங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும், எண்ணெய் எரியும்போது ஏற்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் கரும்புகை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சவால் நிலவுகிறது.
தீ விபத்தின் போது ஆலைக்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் வெளியேறும் கரும்புகை காரணமாக எட்டையபுரம் சாலை மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
