தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (45). இவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஆவார். கட்டடத் தொழிலாளியான இவர், அதே பகுதியில் உள்ள 1-வது தெருவில் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான புதிய வீட்டு கட்டுமானப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார்.
பணியின் போது எதிர்பாராத விதமாக மாடசாமி நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் மாடசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், உயிரிழந்த மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
