தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொன்று தேமுதிகவிற்கும் வழங்கப்பட்டது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக சார்பில் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனத் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உயரிய அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டதை மீனவ மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு
பரதவர் நலக் கூட்டமைப்பின் தலைவர் ஜேசையா வில்லவராயர் ஆலோசனையின் பேரில், ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் கில்டு தலைமையில் திரண்ட மீனவ மக்கள், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தத் தருணத்தில், பரதகுல மீனவ மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் பி.கீதா ஜீவன், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் ஆகியோருக்குக் கூட்டமைப்பினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றச் செயலாளர் சசிகுமார், பிரண்ட்ஸ் கருடோசா, திட்டோ மர்னாஸ், சேவியர் சில்வா, மானவே யோகேஷ், சேசுராஜா, பிரசாத் வாஸ், ரிகன், ஸ்டேரி மோரைஸ் உள்ளிட்ட ஏராளமான மீனவப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.



