• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு - யார் இந்த வழக்கறிஞர் பாண்டி?

  • Share on

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் வழக்கறிஞர்  பாண்டி, தனது அறிமுகக் கூட்டத்தில் நிகழ்த்திய உணர்ச்சிப்பூர்வமான உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டியை அறிமுகம் செய்து வைத்தார்


மண்டல செயலாளர் தமிழ்நெஞ்சன், மாநில ஒருங்கிணைப்பாளர்  கல்விமகராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மருதம் மாரியப்பன், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபாசு, தமிழ்மீட்சி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் கரிகால சோழன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.


நிகழ்ச்சியில்  இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைபாளர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் பிரான்சிசு, தகவல் தொழினுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நித்யா, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கோமதி, மாவட்ட செயலாளர் நல்லையா , அலெக்ஸ், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செய்தி தொடர்பாளர் அழகுகணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 


வேட்பாளர் அறிமுகம் கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டி பேசுகையில்:


“எங்கள் தலைவர் சீமான், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 234 துப்பாக்கி குண்டுகளை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டாகத்தான் நான் இந்த கோவில்பட்டி மண்ணில் வந்து விழுந்துள்ளேன். இந்த குண்டு இங்குள்ள அநீதிகளுக்கு எதிராகப் புரட்சியை ஏற்படுத்தும்,” என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.


தொகுதியின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார். 


அதில்,  கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், கோவில்பட்டி நகராட்சி மாநகராட்சியாக உயர்த்தப்படும். கயத்தாறு நகராட்சியாக மாற்றப்படும்.


கழுகுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அமைக்கப்படும். வீரவாஞ்சி நகர் பகுதியில் நீண்டகாலமாகப் பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு உரிய வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தரப்படும். பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள கோவில்பட்டியின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றார்.


அதோடு மட்டும் அல்லாமல், மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஒரு அதிரடிச் சவாலையும் பாண்டி முன்வைத்தார். அதாவது,  "சட்டமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் மேற்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், 7-வது மாதமே எனது பதவியைத் ராஜினாமா செய்வேன்," என உறுதியளித்தார்.


உரையின் இறுதியில் அரசியல் களத்தைத் சூடாக்கும் வகையில், “வரும் தேர்தல் தமிழருக்கானதா? அல்லது திராவிடருக்கானதா? என்பதை இந்த கோவில்பட்டி மண்ணில் ஒரு கை பார்த்துவிடுவோம்,” என்று சவால் விடுத்தார்.


வழக்கறிஞர் பாண்டியின் இந்த அதிரடிப் பேச்சு, கோவில்பட்டி அரசியல் களத்தில் தற்போதே அனலைக் கிளப்பியுள்ளது.

  • Share on

காணாமல் போன ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளி பிணமாக மீட்பு - திருச்செந்தூரில் பரபரப்பு!

ஓட்டப்பிடாரத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் : எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கம்!

  • Share on