• vilasalnews@gmail.com

காணாமல் போன ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளி பிணமாக மீட்பு - திருச்செந்தூரில் பரபரப்பு!

  • Share on

திருச்செந்தூர் வாய்க்கால் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பாலமுருகன் (48), கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு, தனது மனைவி காளியம்மாள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருச்செந்தூருக்கு வந்துள்ளார்.


உறவினர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்ற நிலையில், பாலமுருகன் மட்டும் காரிலேயே தங்கி ஓய்வெடுத்துள்ளார். ஆனால், மறுநாள் காலை உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த பாலமுருகனைக் காணவில்லை. அவரது மகன் காளிதாஸ் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், மிகுந்த மனவருத்தத்துடன் ஊருக்குத் திரும்பினர்.


இந்நிலையில், நேற்று திருச்செந்தூர் டி.பி. சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செந்தூர் தாலூகா போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் மாயமான ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளி பாலமுருகன் என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பாலமுருகன் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் காவலர் குடியிருப்பு வளாகம் தயார்!

கோவில்பட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு - யார் இந்த வழக்கறிஞர் பாண்டி?

  • Share on