தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, மாநில அரசியலில் நேரடியாகக் களம் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் சமீபத்திய தகவல் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007 முதல் 2019 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய கனிமொழி, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தற்போது தேசிய அரசியலில் திமுகவின் முக்கிய முகமாக விளங்கும் அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கவனத்தை மாநில அரசியலுக்குத் திருப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தலைமைக்குத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இவர், அ.தி.மு.க. சார்பில் 2001, 2006-ம் ஆண்டுகளிலும், தி.மு.க. சார்பில் 2010, 2011, 2016, 2021-ம் ஆண்டுகளிலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
சமீபத்தில் திருச்செந்தூரில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், "யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை" என அவர் பேசியது, அவர் ஒதுங்கிக்கொள்வதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இதற்கிடையே, திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி களம் காண வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் சிலரும் தற்போது விருப்பமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "இது குறித்துப் பதில் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறிச் சிரித்தபடி கடந்து சென்றார். அவரது இந்த மௌனம், அவர் திருச்செந்தூரில் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதி என்பதை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு அளிக்க கடைசி தேதி மார்ச் 2ஆம் தேதி இருந்த நிலையில், தற்போது அது மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மார்ச் 6 ஆம் தேதிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேரடியாகவே கனிமொழி விருப்பமனு அளிக்கும் பட்சத்தில், அவர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, மாநில அரசியலில் நேரடியாகக் களம் இறங்கும் தகவல்கள் உண்மையாகும். இல்லாத பட்சத்தில் அவை அரசியல் யூகங்கள் வரிசையில் போய் சேர்ந்து விடும். ஆகவே, எதுவானாலும் கனிமொழியின் மாநில அரசியல் பிரேவச யூகத்திற்கான விடை மார்ச் 6ல் கிட்டத்தட்ட தெரிந்து விடும்.
இதற்கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதை விரும்பாத திமுக தலைமை, நீங்கள் கட்டாயம் இம்முறை திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தலைமையில் உத்தரவையடுத்து, பௌர்ணமி நாளான மார்ச் 2,2026 இன்று, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு அளித்துள்ளாராம்.

அரசியலில் இருந்து அனிதா ஒதுங்கி ஓய்வு பெறுகிறாரா? அல்லது திருசெந்தூர் தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் மாநில அரசியல் நேரடியாக கனிமொழி நுழைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



