• vilasalnews@gmail.com

நாளொன்றுக்கு ரூ. 1,000 கூடுதல் வருமானம்.. தூத்துக்குடி விவசாயிகளுக்கு வந்தது நல்ல சேதி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, அவர்களின் விளைபொருட்களை நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் புதிய நடமாடும் உழவர் சந்தை மின்சார வாகனத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தொடங்கி வைத்தார்.


சிறு மற்றும் குறு விவசாயிகள் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் கனிகளை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். என்.டி.பி.எல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி பங்களிப்பின் கீழ், சுமார் ரூ. 36.28 லட்சம் மதிப்பில் 8 மூன்று சக்கர மின்சார ஆட்டோக்கள் இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த 8 வாகனங்களில், தூத்துக்குடி உழவர் சந்தைக்கு 6 ஆட்டோக்களும், கோவில்பட்டி உழவர் சந்தைக்கு 2 ஆட்டோக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில்,  62 வருவாய் கிராமங்கள், கயத்தார்  வட்டாரத்தில், 33 வருவாய் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில், 57 வருவாய் கிராமங்கள், கோவில்பட்டி வட்டாரத்தில் 32 வருவாய் கிராமங்கள் பயனடையும். 


வாகனங்களை தொடங்கி வைத்த பின் பேசிய ஆட்சியர் க. இளம்பகவத், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தோட்டத்து விளைபொருட்கள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லப்படும் என்று குறிப்பிட்டார். இதனால் நுகர்வோருக்குப் புதிய மற்றும் பசுமையான காய்கறிகள் மலிவு விலையில் கிடைக்கும்.


முக்கியமாக, இந்த நேரடி விற்பனை மூலம் ஒரு விவசாயி நாளொன்றுக்குக் கூடுதலாக ரூ. 1000 வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும், விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதே மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், என்.டி.பி.எல் பொது மேலாளர் டஅரவிந்த்ராஜா, வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுதாமதி, விற்பனைக்குழுச் செயலாளர் எழில் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

  • Share on

மீனவர் ஓட்டு மீனவருக்கே... அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும்: தூத்துக்குடியில் திரண்ட பரதர் இன மக்கள்!

கனிமொழியா ? அனிதா ராதாகிருஷ்ணனா? திமுக தலைமையின் உத்தரவால் திருச்செந்தூர் தொகுதியில் திடீர் திருப்பம்!

  • Share on