தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையே அமையவுள்ள புதிய நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூலக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கடந்த 08.02.2026 அன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மூலக்கரை, அம்மன்புரம் மற்றும் நத்தகுளம் ஆகிய பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 1250 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் பாசனத்தைப் பெறும் சீனமாவடி குளம், நத்தைக்குளம், நாலாயிரமுடையார் குளம் உள்ளிட்ட 8 குளங்களின் பாசனப் பரப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
சாலை அமைப்பதன் மூலம் கிராமத்தின் முக்கிய வடிகால் வாய்க்கால்கள் சேதமடைந்து, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மக்கள் அஞ்சுகின்றனர். விளைநிலங்கள் வழியாகப் பாதையை அமைப்பதைத் தவிர்த்து, தற்போதுள்ள வண்டிப்பாதை வழியாகச் சாலையை அமைப்பது அல்லது ஆறுமுகநேரி கிராமம் புதுக்குளத்தின் கீழ்ப்புற கரைப்பாதை வழியாகத் திட்டத்தை மாற்றுவது குறித்து மக்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய பாதையை மாற்றி அமைப்பதன் மூலம் விவசாய நிலங்களைக் காக்க முடியும். அதே சமயம் அரசுக்கும் பணித் தொய்வு ஏற்படாமல் ஒரு நல்ல மாற்றுத் தீர்வாக இது அமையும் எனவே தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையே அமையவுள்ள புதிய நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூலக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



