தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை நேரிட்ட பயங்கர வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாண்டவர்மங்கலம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை, செண்பகனேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 8 மணி அளவில், வழக்கம்போல் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்ந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தொழிற்சாலை கட்டிடம் பலத்த சேதமடைந்தது. விஜயாபுரி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (27),, சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இடிபாடுகளில் சிக்கி பலத்த தீக்காயமடைந்த கணேசன் மற்றும் சுடலைமுத்து இருவரும் மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மேற்கொண்டு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




