ஸ்ரீவைகுண்டத்தில் மாவு மில் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (60) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 2, 2024 அன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெரு வழியாக மில்லுக்குச் சென்ற போது, சாலையை மறித்து நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பின்னா் முத்துராமலிங்கத்தை வழிமறித்த பாலசுப்பிரமணியன், இம்மானுவேல் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூவரும் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. முதன்மை நடுவர் எஸ். பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது.
அரசு தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜராகி வாதாடினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட இளஞ்சிறாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிக்குழுமம் உத்தரவிட்டது.
தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




